எல்லா நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
சென்னை: எல்லா வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு அன்றும் வழிபடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில், கோவிட் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.,31 வரை அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அந்த நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவராத்திரி, விஜயதசமி பண்டிகை காலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பண்டிகை காலங்களில் கோவிட் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.
இதனை தொடர்ந்து , தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
*அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இன்று முதல் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி
* அனைத்து டியூசன் மையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதி. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வரும் நவ.,1ம் தேதி முதல் பின்வரும் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்
* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கோவிட் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்
* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி
*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி
*இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி
*ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
*திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.