திருப்பதி பிரம்மோற்சவம்: சர்வபூபால வாகனத்தில் சுவாமி
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான நேற்று திருத்தேருக்கு மாற்றாக சர்வபூபால வாகனத்தை தேவஸ்தானம் நடத்தியது.
திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. எட்டாம் நாள் திருத்தேர் நடப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருவதால், வாகன சேவைகள் கோவிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் திருத்தேருக்கு மாற்றாக சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருள தேவஸ்தான நிர்வாக ஏற்பாடு செய்திருந்தது. அதன்பின் உற்சவமூர்த்திகளுக்கு மதியம் பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் கையில் சாட்டையை ஏந்தி திக் விஜயம் செய்யும் அலங்காரத்தில் மாட வீதியில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.