தவமிருக்கும் தெய்வானை
ADDED :1614 days ago
அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். தெய்வானை திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்துாரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். அன்று காலையில் தபசு மண்டபத்தில் முருகனை மணந்து கொள்ள வேண்டி தெய்வானை தவம் புரிவாள்.
மாலையில் குமரவிடங்கர் (உற்ஸவர் முருகன்) தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்வார். நள்ளிரவில் திருக்கல்யாண மண்டபத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடக்கும். மறுநாள் இருவரும் வீதியுலா வருவர். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.