திருவண்ணாமலை வந்தது 3,500 கிலோ ஆவின் நெய்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 3,500 கிலோ ஆவின் நெய்,கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா துவங்குகிறது. வரும் 19ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 3,500 கிலோ நெய், திருவண்ணாமலை ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு,கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நெய் டின்கள், வரும் 18ம் தேதி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் நேராகவும், ஆன்லைனிலும் செலுத்தி வருகின்றனர். நெய் காணிக்கை செலுத்த, கோவிலில் தனி கவுன்டர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், 20 கி.மீ., துாரம் தெரியும் வரை, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோவில் வளாகம் முழுக்க தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா இனிதே நடக்க வேண்டி, விநாயகர் உற்சவம் நடந்தது.