உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

 வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.

நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்தன.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிர மணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பகல், 2:30 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரத்திற்கு, பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றிவாகை சூடும் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை, வீரபாகுவிற்கு சாந்தாபிஷேகம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, நேற்று மருதமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று முழுவதும் கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !