கல்பாத்தி விசுவநாதர் கோவிலில் தேர் திருவிழா துவக்கம்
பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தி பிரசித்திபெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று துவங்கியது.
நேற்று காலை எட்டரை மணியளவில் உபனிஷத் பாராயணம், வேத பாராயணம், 9:00 மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம், 10:15 மணி அளவில் ரதாரோகணம் நடந்தன. விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, மூலவர்கள் கணபதி மற்றும் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருள, வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தது; கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கிராம மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் விழா நடத்த அரசு அனுமதியளித்ததால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழா காண வருவதற்கு சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளன. இதை கண்காணிக்க பகுதியில் தற்காலிக தடுப்புச்சுவர் அமைத்து போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். இரண்டாவது நாளான இன்று, மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டம், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை 6 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமும் நடக்கிறது.