ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்த அருணாசலேஸ்வரர் : பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை: கொரோனா கட்டுப்பாட்டால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 19ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், 40 கி.மீ., துாரம் தெரியும். இந்நிலையில், நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சந்திரசேகரர், வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், பிரம்ம தீர்த்த குளத்தில், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாட்டால், இந்தாண்டு அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.