ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் வணிக கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். 2013 ல் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரத வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதித்ததால், பக்தர்கள் ரதவீதியில் நடந்து கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் கோயில் கிழக்கு, வடக்கு ரதவீதி நடைபாதை, சாலை ஓரத்தில் வியாபாரிகள் டீக்கடைகள், ஓட்டல்கள் 10 அடி தூரத்தில் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் பக்தர்கள் தரிசிக்க சுவாமி, அம்மன் திருத்தேர்கள் ரதவீதியில் கண்ணாடி கூண்டில் வைத்துள்ள நிலையில், இதனை சுற்றி கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால், தேருக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் ரதவீதியில் பெரும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே ரதவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.