அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை: அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேய சுவாமி மூன்று கண்கள், பத்துக் கைகளுடன் காட்சி அளிக்கிறார். ராமாயண காலத்துடன் தொடர்புடைய தாக புராண வரலாறு கூறும் இக்கோவிலில் மார்கழி அம்மாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ம் நாளான நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேய ஸ்வாமி முத்து அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மகா தீபாராதனை நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.