மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா
மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா எளிமையான முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை, ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் அனைத்து பழநி பாதயாத்திரை குழு சார்பில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் மற்றும் ரோடு பணிகளால் கோயிலுக்கு செல்லும் வழிகளில் தடை உள்பட பல்வேறு காரணங்களால் தைப்பூசத் திருவிழா எளிமையான முறையில் நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலை பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகன் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. கோயிலைச் சுற்றி தேர் பவனி நடந்தது. அரோஹரா கோஷங்கள் முழங்க பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அதன் பிறகு நடைபெற்ற அன்னதானத்தை இந்து தேவஸ்தானம் தலைவர் பாபுலால் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். அனைத்து பழநி பாதயாத்திரை குழு தலைவர் பொன்ராமன், செயலாளர் கோபி, பொருளாளர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.