உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்குள் நடந்த சுவாமி புறப்பாடு

திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்குள் நடந்த சுவாமி புறப்பாடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தை கார்த்திகையை முன்னிட்டு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா உற்ஸவத்தில் நேற்றைய தேரோட்டமும் இன்று நடக்கவிருந்த தெப்பத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக திருவிழாவுக்கு முந்திய நாள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சர்வ அலங்காரத்தில் ஜி.எஸ்.டி., ரோடு அருகே உள்ள தெப்பக் குளக்கரையில் எழுந்தருள்வர். அங்கு கோயில் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, பூஜை முடிந்து சுத்தியல், அரிவாள்,உளி ஆகியவற்றுக்கு தீபாராதனை நடக்கும். பின்பு தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டு, மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பின்பு 16 கால் மண்டபம் முன்பு சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி பக்தர்கள் படம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டு தேரோட்டம், தொப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தை கார்த்திகை அன்று சுவாமி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் காலையில் எழுந்தருள்வார். மாலையில் அபிஷேகம், பூஜை முடிந்து தங்க மயில் வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !