திருமலையில் ஆஞ்சநேயர் பிறப்பிடமான அஞ்சனாத்திரியில் பூமி பூஜை
திருப்பதி, : திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலை தொடர் ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என, திருப்பதி தேவஸ்தானம் கூறப்படும் இடத்தில் பூமி பூஜை நடந்தது.
திருமலை அமைந்துள்ள சேஷாசல மலைதொடரில் ஒன்றான அஞ்சனாத்திரி மலைதொடரில் ஆஞ்சநேயர் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் பல புராணங்களிலிருந்து உதாரணங்களை மேற்கோள் காட்டி,18 பக்க புத்தகத்தை வெளியிட்டது. அன்று முதல் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையே ஆஞ்சநேயர் பிறப்பிடம் என்று பல மடாதிபதிகள் கூறி தேவஸ்தானத்தின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம், அஞ்சனாத்திரி மலைதொடரில் அஞ்சனாதேவி சமேத பால ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டி அங்கு தொடர்ந்து பூஜை நடத்தி வருகிறது. இக் கோயிலை விரிவுபடுத்தி, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டி இன்று பூமி பூஜை கோலாகலமாக துவங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள மடாதிபதிகள், பீடாதிபதிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று நடந்த பூமி பூஜைக்கு கர்நாடக மாநிலம் கிஷ்கிந்தை கோயிலை சேர்ந்த கோவிந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.