திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ரூ.3 கோடியில் திருப்பணி துவக்கம்
திருப்போரூர்: மூன்று கோடி ரூபாய் செலவில் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருப்பணிகள் நேற்று துவங்கியது. இக்கோவிலில், 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவிலுக்கு திருப்பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.இதையடுத்து, கடந்த 12ம் தேதி தொடங்கி யாக சாலை மற்றும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. கோவிலில் உள்ள மூலவர், சக்கர ஸ்தாபனம் தவிர மற்ற சன்னதிகளின் படங்கள் வரைந்து அவற்றுக்கு கலச பூஜை செய்தனர். பாலாலயம் நடந்த சுவாமிகள் சிலைகளை திரையிட்டு மூடினர். அதன்பின் கோவில் பிரதான ராஜகோபுரத்தின் கதவுகள் மூடப்பட்டு திருப்பணிகள் துவங்கியது.இது குறித்து கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கூறும்போது,ச"இக்கோவிலின் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலமாக மூன்று கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக பல உபயதாரர்கள் திருப்பணிகளை எடுத்து செய்ய பொறுப்பேற்றுள்ளனர். திருப்பணிக்காக நேற்று பாலாலயம் நடந்தது. பாலாலயம் நடந்தாலும், மூலவர், சக்கர ஸ்தாபனம் மற்றும் உற்சவர் சன்னதிகளில் வழக்கம்போல் பக்தர்கள் வழிபடலாம். கோவில் திருப்பணியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 044 - 27446226 என்ற தொலைபேசி எண்ணில் கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்றனர்.