சதுரகிரியில் சங்கு ஒலி எழுப்பி பூஜை: அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதி!
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் இன்று ஆடி அமாவாசையை யொட்டி, நேற்று சங்கு ஒலி எழுப்பி சித்தர் வழி பூஜைகள் நடந்தன. சதுரகிரி மலை சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் ஆடி அமாவாசை விழா , பிரதோஷ வழிபாட்டுடன் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று நடைபெறும் அமாவாசை யொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி, அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை கருப்பசாமி, ஆசீர்வாத விநாயகர், மளிகைப்பாறை கருப்பசாமிகளுக்கு சிவராத்திரி வழிபாடு நடந்தது. சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. தேவார பாராயணம், சங்கு ஒலி எழுப்பி சித்தர் வழி பூஜைகளும் நடந்தன. இன்று காலை 9.40 மணிக்கு அமாவாசை துவங்குவதால், அதன்பிறகே சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கசுவாமிக்கு அமாவாசை பூஜைகள் நடக்கின்றன. நாளை காலை 10.30 மணிக்கு அமாவாசை முடிந்த பின் அலங்காரம் கலைக்கப்படுகிறது. அதன் பின் சுவாமிகள் இருநாட்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பர்.
அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதி: சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால், ஆடி அமாவாசை விழாவிற்கான அடிப்படை வசதி பணிகள் முற்றிலுமாக முடங்கின. சதுரகிரி மலையில் நடக்கும் ஆடி அமாவாசை விழா, தென் தமிழகத்தில் மிக அதிக பக்தர்கள் கூடும் விழாவாக உள்ளது. அவர்களுக்கு குடிநீர், குளிப்பதற்கு நீர், கழிப்பறை, மொட்டை போடும் பக்தர்களுக்கு நாவிதர்கள் அமர்த்துதல், பாதுகாப்பு போலீசார், தீயணைப்பு துறையினர், அரசு அதிகாரிகள், வி.ஐ.பி., க்களுக்கு தங்க, சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை கோயில் நிர்வாகம் செய்துதரும். இதற்கான பணிகளை, மூன்று மாதம் முன்பே கோயில் நிர்வாகம் துவக்கிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று பணிகள் துவங்கின. முடிசேகரம், சமையல், பந்தல் , மலைப்பாதையில் மின்விளக்கு போன்ற பல்வேறு வித பணிக்கான ஏலங்கள் முடிந்து, விழா அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டன. இந்நிலையில், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஜவஹர் ஜூலை 11ல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவர்,"கோயில் நிர்வாகத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததால் "சிலரது வெறுப்புகளுக்கு ஆளானார். இதனால் அவர் மாற்றம் செய்யப்பட்டதாக, பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அறிவழகன், கடந்த இருதினங்களுக்கு முன் பொறுப்பேற்றோர். இவரால் இங்கு செய்யவேண்டிய ஏற்பாடுகளை, உடனடியாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதனால் நிர்வாகப்பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கின. அழைப்பிதழ் கூட வினியோகிக்கப் படவில்லை. மலையிலும், அடிவாரத்திலும் ஒரு கழிப்பறைகூட திறக்கப் படவில்லை. அவற்றை ஆக்கிரமித்து கடைகளும், கூடாரங்களும் அமைத்துள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ,முடிசேகர ஏலம் எடுத்தவர்கள் ,மொட்டைபோடும் மையங்களில் அடியாட்களுடன் சென்று ,அங்கிருந்த நாவிதர்களை வெளியேற்றி , மொட்டைபோடும் பக்தர்களிடம் ரூ.10 க்கு பதில் ரூ.200, 250 என, அடாவடியாக வசூலிக்கின்றனர். பாதுகாப்பிற்கு வந்த பெண் போலீசார், பெண் பக்தர்கள் கழிப்பறை வசதியின்றி, மிகுந்த அவதிக்குள்ளாயினர். தண்ணீர் வசதி செய்யப்படாததால், மொட்டைபோட்ட பக்தர்கள் குளிப்பதற்கு தவியாய் தவித்தனர்.