நவகிரக கோட்டையில் குருபெயர்ச்சி விழா
பல்லடம்: பல்லடம் அருகே, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், குருபெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான், நேற்று அதிகாலை, 4.20 மணிக்கு, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், குருபெயர்ச்சி விழா நடந்தது. நேற்று முன்தினம், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி துர்கா வேள்வி பூஜைகளுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. காலை, 9.00 மணிக்கு முதல் கால வேள்வியும், அதையடுத்து, குரு பகவான் மூல மந்திர வேள்வி, திரவிய வேள்வி உள்ளிட்டவையும், அதே தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை, மூன்றாம் கால வேள்வி, மகா யாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து, 4.20 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி நடந்தது. 1,008 தீர்த்த கலச அபிஷேகம், லட்சார்ச்சனை, மற்றும் குருபகவான் திருவீதி உலா, 108 சங்காபிஷேகம், திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. நான்காம் கால வேள்வியை தொடர்ந்து, குரு பகவான், மற்றும் அம்மையப்பராக சிவபெருமானும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.