உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருமானம் குறைந்த கோவில்; திருப்பணிக்கு மானிய திட்டம்

வருமானம் குறைந்த கோவில்; திருப்பணிக்கு மானிய திட்டம்

சென்னை : வருமானம் அதிகம் உள்ள கோவில்களின் உபரி நிதியை, சிறிய கோவில்களின் திருப்பணிக்கு மானியமாக வழங்க வேண்டும் என, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு: ​​​​அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில், 35 ஆயிரம் கோவில்களில் ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது; அதிலும், 13 ஆயிரம்கோவில்களில், ஒரு வேளை பூஜை கூட நடத்த வருவாய் இல்லாததால், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. நிதி வசதி மிக்க கோவில்களின் உபரி நிதியை, பிற கோவில்களுக்கு மானியமாக வழங்கினால், திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடியும். எனவே, அனைத்து இணை, உதவி கமிஷனர்கள் ஆய்வு செய்து, நிதி உதவி தேவைப்படும் கோவில்களின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். நிதி உதவி அளிக்கக்கூடிய கோவில்களின் பட்டியலை, நிதி வசதியற்ற கோவில் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும். நிதி உதவி தேவைப்படும் கோவில்களின் நிர்வாகிகள், திருப்பணிக்கான விரிவான மதிப்பீடுகளை தயார் செய்ய வேண்டும். மானியம் வழங்கக் கோரி, நிதி வசதி மிக்க கோவில் நிர்வாகிகளுக்கு மனு அளிக்க வேண்டும். நிர்வாக அனுமதி பெற்று, விதிகளை பின்பற்றி, திருப்பணி வேலைகள் துவக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !