ஏகாம்பரநாதர் கோவிலில் வெயிலை சமாளிக்க கூரை, கூல் பெயின்ட் வசதி
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் நடந்து செல்லும் வழியில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கூரை வேயப்பட்டு, தரையில் ரசாயனம் கலந்த கூல் பெயின்ட் பூசப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், கோவில் வளாக தரையில் சூடு பறக்கிறது.ராஜகோபுரத்தில் இருந்து வெறும் காலில் பக்தர்கள் உள்ளே நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ராஜகோபுரத்தில் இருத்து முதல் பிரகாரம் வரை, மண் தரை இருப்பதால், அங்கு தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் தரை உள்ள பகுதிகளில், வெயிலில் பாதம் சுடாமல் இருக்க, கோவில் வளாகத்தில் ரசாயனம் கலந்த கூல் பெயின்ட் பூசப்பட்டுள்ளது. தவிர, கூரையும் வேயப்பட்டு உள்ளது. வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவிலில், வெளி பிரகாரத்தை சுற்றிச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கூல் பெயின்ட் அடிக்காததால், கோவிலில் நடந்து செல்ல முடியாமல், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இக்கோவில்களிலும், கூல் பெயின்ட் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.