உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் மரியாதையுடன் அவ்வை அடக்கம்: கண்ணீர் சிந்திய பக்தர்கள்!

கோயில் மரியாதையுடன் அவ்வை அடக்கம்: கண்ணீர் சிந்திய பக்தர்கள்!

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் கோயில் யானை அவ்வை பக்தர்கள் கண்ணீர் சிந்த, கோயில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை "அவ்வை, 53, நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்தது. இரவு முழுவதும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, யானைக்கு திரவிய அபிஷேகங்கள் செய்தனர். பரிவட்டம் கட்டப்பட்டு, கோயில் மரியாதை செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு, உடல் லாரியில் ஏற்றப்பட்டது. ரத, கிரிவீதிகளில் இறுதி ஊர்வலம் சென்றது. அங்கு திரண்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தென்பரங்குன்றம் பசு மடத்தில் "அவ்வை யின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோயில் சார்பில் தீபம் ஏற்றப்படட்டது. காலை 9 மணிக்கு, கோயிலுக்குள் 3 வெள்ளிக்குடங்களில் புனித நீர் நிரப்பி யாக பூஜைகள் நடந்தன. பின், நேற்றுமுன்தினம் மாலை, இரவு, நேற்று காலை வழக்கமான பூஜைகள் நடந்தன. மூலவர்கள் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, முருகப்பெருமான் கரத்திலுள்ள வேலுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. கோயில் மண்டபங்களில் புனித நீர் தெளிக்கப்பட்ட பின், நடை திறக்கப்பட்டது. துளிகள்: * 41 ஆண்டுகள் கோயில் பணியாற்றிய அவ்வை மவுத் ஹார்ன் வாசிப்பதில் தமிழக அளவில் புகழ் பெற்றது. * அவ்வை இறந்ததால், திருப்பரங்குன்றத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. * உடல் அடக்கம் நடந்த இடத்தில், போலீசாரிடம், "அவ்வையை கடைசியா பார்த்துக்கிறோம் என, சிறுவர்கள் முதல் முதியோர் வரை கெஞ்சியதால், அவர்களை போலீசார் அனுமதித்தனர். * அடக்கம் முடிந்த பின், பெண்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !