புதுமண்டபத்தில் மதுரையின் முதல் நூலகம்; கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை, -மதுரை புதுமண்டபத்தில் 1942ம் ஆண்டில் பொது நுாலகம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள புதுமண்டபத்தின் மைய பகுதியில் 1800ம் ஆண்டு பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
பழங்காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகளை புத்தகங்களாக மாற்றி அதை விற்க புத்தக கடைகள் முதன்முதலில் இங்குதான் அமைக்கப்பட்டன. 1942 மார்ச் 6ல் அருங்காட்சியகத்துடன் அமைந்த நுாலகத்தை அன்றைய சென்னை மாகாண கவர்னர் திறந்து வைத்தார். இதை மதுரையின் முதல் பொது நுாலகம் எனலாம். இதற்கான கல்வெட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மையமண்டபத்தின் கதவு ஓரம் இருந்த நிலையில் மாயமானது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு எம்.பி., வெங்கடேசன் கொண்டு சென்றார். இந்நிலையில் புதுமண்டப கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் அந்த கல்வெட்டுடன் கூடிய துாண், மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.