ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை இல்லை : பக்தர்கள் திணறல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் வழிகாட்டி பலகை இன்றி பக்தர்கள் கூட்ட நெரிசலில்சிக்கி சிரமத்துடன் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில்,வெள்ளி, சனி, ஞாயிறுகளில் தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, தரிசிக்கின்றனர். நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலில் நீராடி விட்டு சுவாமி, அம்மனை தரிசிக்க முதல் பிரகாரத்தில் குவிந்தனர்.இங்கு சிறப்பு, இலவசதரிசனத்திற்கு செல்ல வழிகாட்டும் பலகை, போதுமான கோயில் காவலர்கள் இல்லாததாலும், சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்கிய பக்தர்கள்வழி தெரியாமல்,இலவச தரிசனம் வரிசையில் பல நிமிடம் வரை காத்திருந்து, கூட்ட நெரிசல் சிக்கி தவித்தனர்.நெரிசலில் சிக்கிய பக்தர்களை ஒழுங்குபடுத்த இரு போலீசாரை தவிர, வேறு யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பக்தர்கள் முண்டியடித்து சென்றதில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர். கோயிலில் தரிசனம் செய்த கோபிசெட்டிபாளையம் தங்கமணி, 65, கூறுகையில், ரூ.200க்கு டிக்கெட் வாங்கி வழி தெரியாமல் இலவசதரிசன வரிசையில் வெகுநேரம் காத்திருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம்எந்த முன்ஏற்பாடும் செய்யாததால், முண்டியடித்து செல்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.