மிளகாய் பொடி கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
கொரட்டூர்: ஆடி இரண்டாம் வாரத்தை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, மிளகாய்ப் பொடி கரைசலில் குளித்து, அம்மனுக்கு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கொரட்டூர், பெரியார் நகரில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு, நேற்று காலை பால்குட விழா நடந்தது. மாலையில், தீ மிதி திருவிழா மற்றும் அலகு குத்தும் திருவிழா ஆகியவை விமரிசையாக நடந்தன. எலுமிச்சை, செவ்வாழை, ஆப்பிள், சாத்துக்குடி, தர்ப்பூசணி, அண்ணாசி உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்ட, நாகவல்லி அம்மனின் திருவீதி ஊர்வலம் நடந்தது.இதில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, அலகு குத்தி தேர் இழுத்தனர்.மேலும் சில பக்தர்கள், மிளகாய்ப் பொடி கரைசலில் குளித்தனர்.சிறிய ராட்டினம் வாயிலாக, பறவை காவடி எடுத்த பக்தர்கள், அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். இன்னும் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் வாயிலாக நாகவல்லி அம்மனை வழிபட்ட பக்தர்கள், மெய்சிலிர்க்க வைத்தனர்.