திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி மாட வீதி உலா
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடி மாதங்களில், கிருத்திகை விழா கொண்டாடப்படும். இந்தாண்டு ஆடி கிருத்திகை விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.மொட்டை அடித்து, அலகு குத்தி, காவடி எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு என, அந்தந்த அரசு துறையினர், ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிருத்திகை விழாவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு சென்றனர். இரவு, சுவாமி மாட வீதி உலா நடந்தது.
சிங்கப்பெருமாள் கோவிலில் விசேஷம் : சிங்கப்பெருமாள் கோவில், ரயில் நிலைய தெருவில் பழமையான சிங்கை சிங்காரவேலன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆடி கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, 108 பால்குடம் எடுத்த பக்தர்கள், குளக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.காலை 10:30 மணிக்கு அக்னி சட்டி நிகழ்ச்சியும், 12:00 மணிக்கு சிங்கார வேலனுக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சியும் நடந்தன.மாலை 3:00 மணிக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள் சடல் சுற்றுதல், பறவை காவடி எடுத்து, சுவாமிக்கு மாலை அணிவித்தனர். 108 வேல் குத்துதல், உரல் இழுத்தல், காவடி எடுத்தல், ஆட்டோ இழுத்தல் நேர்த்திக்கடன் நிகழ்த்தினர். 100க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதிஉலா நடந்தது.