உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளாஸ்டிக் டப்பா ரூ.20 கோவிலில் பக்தர்களிடம் நூதன கொள்ளை

பிளாஸ்டிக் டப்பா ரூ.20 கோவிலில் பக்தர்களிடம் நூதன கொள்ளை

பல்லடம்: சிறிய‌ பிளாஸ்டிக் டப்பா ஒன்றுக்காக, பக்தர்களிடம், 20 ரூபாய் வசூலிக்கும் நூதன கொள்ளை சம்பவம், பல்லடம் அருகே அய்யன் கோவிலில் நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், திருப்பூர் கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம மக்கள் பலரும் வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள புற்று மண்ணை பயன்படுத்தினால் விஷக்கடி, மற்றும் தோல் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அய்யனை வழிபட்ட பின், புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டும், வீடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு புற்று மண்ணை எடுத்துச் செல்ல பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்கள், டப்பா உள்ளிட்டவற்றை நாடுகின்றனர். பக்தர்களின் தேவையை உணர்ந்த சிலர், சிறிய டப்பா ஒன்றை, 20 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அதுவும், பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் வழியிலேயே தைரியமாக இந்த விற்பனை நடந்து வருகிறது. ஆடி அமாவாசை நாளான இன்று கோவிலில், அதிக அளவிலான கூட்டம் இருந்ததால்,பக்தர்களும் வேறு வழியின்றி, 20 ரூபாய் கொடுத்து டப்பாவை வாங்கி சென்றனர்.

பக்தர்கள் சிலர் கூறுகையில், வழக்கமாக, அமாவாசை, பவுர்ணமி, மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வருவோம். புற்று மண் எடுத்துச் செல்ல விற்பனை செய்யப்படும் டப்பா, 5 ரூபாய்க்கும் தேராது. இது, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறநிலைத்துறை கோவிலிலேயே இவ்வாறு நடப்பது கண்டிக்கத்தக்கது என்றனர். இது குறித்து கோவில் உதவி கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, டப்பா விற்பனை செய்ய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. நான், கோவிலில் தான் உள்ளேன். இது குறித்து உடனடியாக விசாரிக்கிறேன் என்றார். வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில், பூஜை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, கடந்த மூன்று ஆண்டுக்கு முன் புகார் எழுந்தது. தற்போது, டப்பா 20 ரூபாய்க்கு விற்கப்படுவது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அய்யன் கோவிலும் ஒன்று. பண்டிகை, மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம். சாதாரண டப்பாவுக்கு, 20 ரூபாய் வசூலித்தால், உண்மையான பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்ய வரும் அடித்தட்டு மக்களின்‌ மனம் புண்படும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். பண்டிகை, விசேஷ நாட்களில் இது போன்ற முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !