மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : பக்தர்கள் ஏமாற்றம்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அதிக அளவில் திரண்ட பக்தர்களை சமாளிக்க போலீஸ் இல்லாததால் ஊஞ்சல் உற்சவத்தை முன்னதாக நடத்தி முடித்தனர். இதனால் வழக்கமான நேரத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லா இடங்களிலும் நெரிசல் இருந்தது. எனவே இரவு 12 மணிக்கு துவங்க வேண்டிய உஞ்சல் உற்சவத்தை 10 மணிக்கு துவக்கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். 10.45 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவத்தை நிறைவு செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏமாற்றம்: ஆடி அமாவாசையின் போது வழக்கத்தை விட 2 மடங்கு பக்தர்கள் வருவார்கள். இதை கணக்கில் கொண்டு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் பஸ் வசதி செய்வார்கள். நேற்று முன்தினம் மாமல்லபுரம் பாதுகாப்பிற்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பாதுகாப்பிற்கும் விழுப்புரம் மாவட்ட போலீசார் சென்று விட்டனர். இதனால் குறைவான போலீசாரே மேல்மலையனூர் வந்திருந்தனர். இவர்களை கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் முன்னதாக ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். வழக்கமாக 11.30 முதல் 12 மணிக்குள் உற்சவம் துவங்கும் என்பதை கருத்தில் கொண்டு 11 மணிக்கு பிறகு பல ஆயிரம் பக்தர்கள் வந்தனர். ஊஞ்சல் உற்சவம் 10.45 மணிக்கே முடிந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.