உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரியில் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகம், திருக்கல்யாணம் கோலாகலம்

சிறுவாபுரியில் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகம், திருக்கல்யாணம் கோலாகலம்

சிறுவாபுரி : விண்ணை பிளந்த அரோகரா கோஷத்துடன், 19 ஆண்டுகளுக்கு பின் நடந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு என்ற சிறுவாபுரி கிராமத்தில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.ஐந்து நிலைகளில் கோபுரம் உள்ளது. பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரஹம் தவிர மற்ற விக்ரகங்கள், மரகத பச்சை கற்களால் ஆனது.இங்குள்ள மூலவரை தரிசனம் செய்தால், வாஸ்து தோஷம், திருமண தடை நீங்கும் என்பது, பக்தர்கள் நம்பிக்கை. இதற்காக, செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில், பக்தர்கள் அதிகளவில் வருவர்.

இக்கோவிலில் 2003ல் கும்பாபிஷேகம் நடந்து, 19 ஆண்டுகள் கடந்த நிலையில் கோபுரம், சிலைகள் ஆகியவை பொலிவிழந்து காணப்பட்டன.இதையடுத்து, கடந்தாண்டு முதல் மூலவர், அண்ணாமலையார், வினாயகர், பரிவார சன்னிதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. 1 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை வேலுார் இணை கமிஷனர் லட்சுமணன் தலைமையில், நேற்று காலை 9:00 -- 10:30 மணிக்கு, கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆனந்த பரவசத்தில் அரோகரா, அரோகரா என, கோஷங்கள் எழுப்பினர்.

மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்; இரவு 7:30 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.மத்திய அமைச்சர் முருகன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகர், கோவிந்தராஜன், உதவி கமிஷனர் சித்ராதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாரதி தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !