உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபால சுவாமி ஜெயந்தி மகோத்சவத்தின் நான்காம் நாளான நேற்று ராஜகோபாலன் சேஷ வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி ஸ்ரீ ஜெயந்தி மகோற்சவம் கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:30 மணிக்கு ராஜகோபாலன் ஆளிலைக் கண்ணன் அலங்காரத்தில் தங்க பள்ளத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பகல் 11:00 மணி அளவில் வேணுகோபாலன் சன்னதியில் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலன் எழுந்தருளி அலங்கார விசேஷ திருமஞ்சனம், சேவை சாற்றுமரை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. மாலை 6:30 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. ஜியர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.