உலகை காக்கும் ஈசன் பாதுகாப்புடன்.. ராஜாதி ராஜ மகாராஜ விநாயகர் பராக்!
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிய நிலையில்வியாபாரிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் விநாயகர் சதுர்த்திக்குத் தயாராகி வருகின்றனர்.
ராமநாதபுரம் வண்டிக்கார தெரு இளைஞர் அமைப்பினர் சேர்ந்து வித்தியாசமான வடிவமைப்பில் பிரம்மாண்ட விநாயகரை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் 14 அடி உயரத்தில் அரியணையில் வீற்றிருக்கும்மகாராஜா போன்ற விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கு பின்புறம் கையில் சூலாயுதத்துடன் புஜபல பராக்கிரமத்துடன் சிவபெருமான் பாதுகாவலராக நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகை காக்கும் ஈசன் பாதுகாப்பில் ராஜாதி ராஜ மகாராஜ விநாயகர் சிலையானது ரூ.80 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்டுஉள்ளது. சிலை அழகை இவ்வழியே செல்வோர் பார்த்து பரவசமடைகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், உறியடி போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக இளைஞர் அமைப்பைச் சேர்ந்த ஹரிஹரன், பாலமுருகன் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் முக்கியபகுதிகளில் நேற்று ஆக.30 மாலை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள்நடக்கிறது. ராமநாதபுரத்தில் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் செப்.2 மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு வழிவிடு முருகன் கோயில் வருகின்றன. அங்கிருந்து வண்டிக்காரத் தெரு, அக்ரஹாரத் தெரு வழியாக நொச்சியூரணிக்கு கொண்டு சென்று கரைக்கப்படும். ராமநாதபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.