பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் - பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவில் அருகே, சுத்த தீர்த்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில், ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை 3 முறை வலம் வருவார். இந்த ஆண்டும், தெப்ப உற்சவம், மார்ச் 4ம் தேதி துவங்கி, 5 நாட்கள் நடத்தவும், அதைத் தொடர்ந்து 9ம் தேதி துவங்கி, 5 நாட்கள் தவன உற்சவம் நடத்த கோவில் உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக, குளத்தில் புதிதாக தெப்பம் அமைக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தகர பேரல்களைக் கொண்டும், சவுக்கு கட்டைகள் கொண்டும் தெப்பம் அமைத்து வருகின்றனர்.