ஜப்பானில் கோவில் கட்டுவதற்கு உதவி செய்வோம்: தருமபுரம் ஆதீனம் தகவல்
தஞ்சாவூர்: ஜப்பானில்,கோவில் கட்டுவதற்கு வேண்டிய உதவிகளை செய்வோம் என தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூரில், ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில், நேற்றுமுன்தினம் இரவு, தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று ஆசி வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது; ஜப்பானில், கடந்த 1,572ம் ஆண்டில் மிகப் பெரிய சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு, உலக நாடுகள் முழுவதும் மேன்மைமிகு சைவ நீதி வளர்ந்திருக்கிறது. நம்முடைய ஆதீனங்கள் செய்கிற பல திருக்கோவில்கள் கும்பாபிஷேகத்தை, ஜப்பான் நாட்டினர், அறிந்துள்ளனர். உலகம் முழுவதும் சைவ சமயம் பரவ வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். வழிபாட்டு முறையில் தமிழ் மொழியும், ஜப்பான் மொழியும் ஒத்து போகிறது. அதை அவர்கள் உணர்ந்து கொண்டு தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்யும் நோக்கத்தில், ஜப்பானியர் வருகின்றனர். மேலும், அவர்கள் தமிழ்மொழியை விருப்பி படிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் படிப்பதை குறைவாக பல பிள்ளைகளின் பெற்றோர்கள் நினைக்கின்றனர். தமிழ் படித்தால் அரசு வேலை என அறிவித்தால், தமிழை பலரும் படிப்பார்கள். ஜப்பானில் கோவில் கட்ட உள்ளனர். அவர்களுக்கு நாமும் வேண்டிய உதவிகளும், சமய பிரசாரத்துக்கு தேவையான உதவிகளும் இங்கிருந்து செய்வோம் என உறுதியளித்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்விழாவில் ஜப்பான் சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி என்கிற தகாயுகி ஹோசி பாராட்டுரையாற்றினார். இவருடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.