உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்

வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்

பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொன்விழா ஆண்டு கடந்து, வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தில், ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர், கடந்த, 1971ம் ஆண்டு முதல், வெள்ளியங்கிரி மலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.  நேற்று முன்தினம், பொன்விழா கடந்து, 52வது ஆண்டாக பாதயாத்திரை புறப்பட்டனர். பருவாய் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, கும்மி ஆட்டம், காவடி ஆட்டம்  உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து நடை பயணமாக, விநாயகர் கோவிலுக்கு சென்றனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின், பாதயாத்திரையாக வெள்ளியங்கிரி  மலைக்கு புறப்பட்டனர். குடும்பத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.

இது குறித்து குருசாமி ஈஸ்வரன் கூறுகையில், எனது தந்தை காலம் முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். பாதயாத்திரையை இன்று (நேற்று முன்தினம்) துவக்கி  ஆறு நாட்களில் வீடு திரும்புவோம். வெள்ளியங்கிரி மலை ஆண்டு சுனையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை, பருவாய் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம். பங்குனி மாதம்  மேற்கொள்ளும் இந்த பாத யாத்திரையில், ஆண்டுதோறும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். நடப்பு ஆண்டு, 120 பேர் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.‌என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !