சித்தர்மலை சித்த மகாலிங்கசாமி கோயில் கும்பாபிஷேகம்
நிலக்கோட்டை: எஸ். மேட்டுப்பட்டி சித்தர்மலையில் உள்ள சித்த மகாலிங்கசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 1487 ஆம் ஆண்டு கோயில் கட்டப்பட்டது. சித்தர்கள் வழிபாடு செய்யப்பட்ட சிவாலயம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கிய கோயிலாக அமைந்துள்ளது. சாமிக்கு வலதுபுறம் ஆவடை அருள் பாலிக்கிறார்.
இக்கோயில் புணரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. படிகள் இல்லை. தற்போது 1500 படிகள் கட்டப்பட்டு, வழி மண்டபங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாகனம், கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் முதல் காலையாக பூஜை துவங்கியது. இன்று விக்னேஸ்வர பூஜை மகாபூர்ணாஹூதியுடன் தீபாராதனை நடந்தது. புனித தீர்த்தங்கள் கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் சிவ ராஜா பட்டர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்திய ஞான பரமாச்சாரியார், நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் கோயில் செயல் அலுவலர் பாலசரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். சித்த மகாலிங்கம் மலை சீரமைப்பு அருளாளர்கள் குழுவினர், பரம்பரை பூசாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அன்னதானம் நடந்தது. சுகாதாரத் துறை சார்பில் முதல் உதவி முகாம் நடைபெற்றது. நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர், டி.எஸ்.பி., முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.