உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சபரிமலை,  சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ஐந்தாம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஸ்ரீகோயிலில் சுத்திகலச பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிஷேகம், கணபதி ேஹாமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 9:00 மணிக்கு கொடியேற்றத்துக்கான பூஜைகள் தொடங்கியது. பூஜிக்கப்பட்ட கொடிப்பட்டம் மேளதாளத்துடன் பவனியாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. நெற்றிப்பட்டம் கட்டிய யானை கொடிமரத்தின் அருகே வந்தது. தொடர்ந்து தந்திரி பூஜைகள் நடத்திய பின்னர் 9.45 மணிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட போது சரணகோஷம் முழங்கியது. விழா வரும் ஏப்., ஐந்தாம் தேதி வரை நடக்கிறது. ஏப்., நான்காம் தேதி வரை தினமும் மதியம் உற்சவபலியும், இரவில் ஸ்ரீபூதபலி என்ற யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்., நான்காம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், ஐந்தாம் தேதி மதியம் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !