மீண்டும் கழுகுகள் தரிசனம் வேண்டி திருக்கழுக்குன்றத்தில் பாராயணம்!
திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கழுகுகள் தரிசனம் அளிக்க வேண்டி திருமுறை பாராயணம் நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. இங்கு நான்கு வேதங்களை குறிக்கும் மலைக்குன்றின் உச்சியில், வேதகிரீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். இறைவன் சாபத்தால் கழுகுகளாக உருமாறிய இரு முனிவர்கள், சாபவிமோசனத்திற்காக, தினமும் இக்கோவிலை வலம் வந்து சுவாமியை தரிசித்தனர். சுவாமியை தரிசிக்க, நீண்டகாலமாக வந்துகொண்டிருந்த அவை, இருபது ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகின. மீண்டும் வரவில்லை.கழுகுகள் வருவதற்காக, பல்வேறு வழிபாடுகள் நடத்தியும், அவை திரும்பவில்லை. அவை மீண்டும் வரவேண்டி, திருக்கழுக்குன்றத்தில் இயங்கும் திருவாவடுதுறை ஆதீன மடம் சார்பில், கோவில் அடிவாரத்தில் நேற்று திருமுறை பாராயணம் நடந்தது. அமைப்பாளர் குணசேகரன் தலைமையில், சைவ திருமுறை மாணவர்கள் பாடல்கள் பாடி வேண்டினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.