உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் வீரழகர் இறங்குகிறார்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழாவின் துவக்கத்தின் காப்பு கட்டுதலுக்காக மூலவர் மற்றும் உற்சவர் சுந்தரராஜ பெருமாள் எனும் வீரழகருக்கு இன்று அதிகாலை 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்துடன் கோயிலின் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகருக்கும் உற்சவர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் கையில் காப்பை கட்டினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து முதல் நாள் மண்டகப்படிக்காக மானாமதுரை நகராட்சி அலுவலகத்திற்கு வீர அழகர் மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை மே.4ம் தேதியும், வீர அழகர் ஆற்றில் இறங்குதல் மே.5ம் தேதியும்,நிலாச்சோறு நிகழ்ச்சி மே.6ம் தேதியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !