சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு; கூடுதல் நாட்கள் அனுமதிக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் நாட்கள் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது இக்கோயிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் வருடம் தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போதைய தமிழ் வருடத்தில் ஜூலை 17ல் ஆடி 1ஆம் தேதி முதல் அமாவாசையும், ஆகஸ்ட் 16ல் ஆடி 31ஆம் தேதி மற்றொரு அமாவாசை வழிபாடும் வருகிறது. இதில் கோயில் நிர்வாகத்தின் சார்பில், ஆகஸ்ட் 16ல் வரும் அமாவாசையை முன்னிட்டு தான், திருவிழா நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை அறநிலையதுறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் வரும் இரண்டு அமாவாசை வழிபாடுகளையும் தரிசிக்க மிகவும் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமான 4 நாட்கள் அனுமதிக்கு பதிலாக ஆகஸ்ட் 13 முதல் 20 வரை, ஒரு வாரம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.