உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி தேரோட்டம் ; பக்தர்கள் பரவசம்

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி தேரோட்டம் ; பக்தர்கள் பரவசம்

மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கள்ளழகர் எழுந்தருள சிறப்பு பூஜைகளுக்கு பின் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம்  பிடித்தனர். கோவில் வீதிகள் வழியாக ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்: மதுரை மேலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து அழகர்கோவிலுக்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் வருவதுண்டு. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நேற்று (31ஜுலை)முதல்-ஆக1 இரவு 11 மணி வரை மதுரை -அழகர் கோவில் வழியாக மேலூர் வரும் வாகனங்கள் வலையபட்டி- மரக்காயர்புரம் வழியாக மேலூர் செல்ல வேண்டும். மேலூர் -அழகர் கோவில் - மதுரை வரும் வாகனங்கள் மரக்காயர்புரம், நாயக்கன்பட்டி வழியாக மதுரைக்கு வர வேண்டும் என போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலூர் மதுரை ஆகிய இடங்களிலிருந்து தேரோட்டத்திற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் சிறப்பு பஸ்களை பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !