உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் கோவில் திருவிழா; இன்று மாலை தேரோட்டம்

வடமதுரை சவுந்தரராஜப்பெருமாள் கோவில் திருவிழா; இன்று மாலை தேரோட்டம்

வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை 9:00 மணியளவில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமம் நடக்கிறது. பின்னர் மாலை 4:00 மணியளவில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் ரத வீதிகள் வழியே வலம் வரும். இரவு 8:00 மணியளவில் சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன், தக்கார் விஸ்வநாத், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !