கம்பிக்குடியில் முற்கால பாண்டியரின் அபூர்வ வைஷ்ணவி சிற்பம்
காரியாபட்டி: காரியாபட்டி கம்பிக்குடியில் முற்கால பாண்டியரின் ஆபர்வ வைஷ்ணவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் கருப்பசாமி, தர்மராஜா, முரளிதரன் தகவலில், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் செல்லப்பாண்டியன் , ஸ்ரீதர் , தாமரைக்கண்ணன் கம்பிக்குடி காட்டுப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது முற்கால பாண்டியரின் அபூர்வ வைஷ்ணவி சிற்பம் கண்டெடுத்தப்பட்டது.
அவர்கள் கூறியதாவது; சப்தமாதார்களில் ஒருவர் வைஷ்ணவி. சிவன் கோவில்களில் சப்தமாதர்களின் சிற்பங்கள் ஒரு தொகுப்பாக காணப்படும். ஒரு தொகுப்பில் 7 சிற்பங்கள். ஆண் கடவுள்களில் பெண் அம்சமாக வணங்கப்படுகிறார்கள். இங்குள்ள வைஷ்ணவி சிற்பம் திருமாலின் பெண் அம்சமாக வணங்கப்படுகிறார் . வைஷ்ணவிக்கு நாராயணி என மற்றொரு பெயரும் உண்டு. அனைத்து சப்த மாதர் சிற்பங்களும் அமர்ந்த நிலையிலேயே காணப்படும். இங்கு நின்ற நிலையில் காணப்படுவது சிறப்பு. வைஷ்ணவியின் கிரீடம் மகுடமாக, கழுத்தில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. வலது மேல் கையில் சுதர்சன சக்கரம், இடது மேல் கையில் சங்கும் காணப்படுகிறது. மார்பில் வீரத்தின் அடையாளமாக வீரச்சங்கிலி இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள மூவருக்குமே வீரச்சங்கிலி காணப்படுவது அபூர்வமானது. தற்போது வரை வழிபாட்டில் இருக்கும் சப்த மாதர் சிற்பங்கள் தனியாக இருக்கும். இங்கு காணப்படும் வைஷ்ணவி சிற்பத்தின் இரண்டு புறமும், பணிப்பெண்கள் இருவர் , ஒரு கையில் சாமரம் வீசுவது போலவும் , மற்றொருவர் கையில் மலர் வைத்திருப்பது போல் உள்ளது சிறப்பு. பாதி புதைந்த நிலையில், இரண்டரை அடி உயரம், 4 அடி அகல பலகைக்கல்லில் காணப்படுகிறது. முற்கால பாண்டியர்களின் கலைப் பாணியான புடைப்பு சிற்ப பாணியில், 8ம் நூற்றாண்டாக கருதலாம். இதுபோன்ற அபூர்வமான சிற்பங்களை பாதுகாப்பது நமது கடமையாகும், என்றனர்.