பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்; பத்மநாபபுரம் அரண்மனையில் ஓண கொண்டாட்டத்தை கேரளா அரசு ரத்து செய்ததை கண்டித்து அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. 1956- ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி பத்மநாபபுரம் அரண்மனை இன்னும் கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கேரள அரசு ஊழியர்கள் பணி புரிகின்றனர். கேரளாவில் திருவோண பண்டிகை 10 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்படும் போது பத்மநாபபுரம் அரண்மனையிலும் அது கொண்டாடப்பட்டு வந்தது. இதில் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொள்வர். ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி கேரள அரசு இங்கு ஓண கொண்டாட்டத்தை ரத்து செய்தது. இதனால் அத்தப்பூ உள்ளிட்ட எந்த நிகழ்வும் இங்கு நடைபெறவில்லை. திருவோண நாளில் அரண்மனை அடைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரண்மனையை தன்வசம் வைத்துள்ள கேரள அரசு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஓண விழாவை ரத்து செய்தது தவறு என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கண்டித்து இன்று அரண்மனை வாசல் முன்பு பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையில் அடுத்த ஆண்டு முதல் பத்மநாபபுரம் அரண்மனையில் வழக்கம் போல் ஓண பண்டிகை கொண்டாடப்படும் என்று கேரள அரசு விளக்கமளித்துள்ளது.