செல்வ விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு
பல்லடம்: பல்லடம் அருகே, செல்வ விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் எஸ்.ஏ.பி., சேரன் மாநகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த அக்., 24 அன்று துவங்கியது. மறுநாள், கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வள்ளி கும்மி ஆட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினசரி மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. பால், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் செல்வவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.