உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி; நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி; நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை

பழனி ; பழனி முருகன் கோவிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறநிலையத்துறை அரசாணை இருக்கிறதா என்று கேட்டு பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி, ஞானப்பழம் தனக்கு கிடைக்காத கோபத்தில், ஆண்டியாய் இங்கு வந்து தங்கினார் முருகப்பெருமான். அதனால் அவரை இங்கு ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக காண முடிகிறது. சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தனான முருகப் பெருமானை ஞானப்பழம் நீ என அழைத்ததால் பழம் நீ என வழங்கப்பெற்று. அதுவே பின்னர் பழனி என மருவி விட்டது. சிறப்பு மிக்க இக்கோயிலில் தினமும் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இங்கு தைப்பூச திருவிழா 19ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தற்போது பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூரை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி காவடிகள் எடுத்து வந்தனர். கோயிலுக்குள் சென்ற இவர்களை கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, நாதஸ்வரம், மேளம் அடித்து வர அனுமதியில்லை என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில்; 48 வருடமாக விரதம் இருந்து, மேள தாளங்கள் முழுங்க முருகனை தரிசித்து வருகிறோம். தற்போது திடிரென அனுமதி மறுப்பது எங்களுக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. உதவி ஆணையர் உத்தரவை ரத்து செய்து மேளதாளங்கள் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும். என பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !