சிதம்பரம் மவுன மடத்தின் மடாதிபதி முக்தி அடைந்தார்
ADDED :527 days ago
சிதம்பரம்:சிதம்பரம் மவுன சுவாமி மடம் மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள், நேற்று காலை முக்தி அடைந்தார்.சிதம்பரம் சபாநாயகர் கோவில் தெருவில் மவுன சுவாமிகள் மடம் உள்ளது. வீர சைவ மடமான இதை, 300 ஆண்டுகளுக்கு முன் சைவ நன்னெறி தழைக்க ஞான சித்தராக விளங்கிய மவுன சுவாமிகளால் நிறுவப்பட்டது. இம்மடத்தில், ஆன்மிக உபதேசம் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. இம்மடத்தின் 8வது பட்டமாக 1981ல், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், 77, பொறுப்பேற்று, நிர்வகித்து வந்தார். எம்.ஏ., தமிழ் படித்துள்ள இவர், சென்னையில் தமிழாசிரியராக பணியாற்றியவர். கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று அதிகாலை முக்தி அடைந்தார். அவரது உடல் நேற்று மாலை, மடம் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.