உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை

காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை

காஞ்சிபுரம்: ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் விமரிசையாக நடந்தது.

உற்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கடந்த 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, மேனாப் பெட்டியில் எழுந்தருளி அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார். இரவு 1:00 மணிக்கு செவிலிமேடில் கிராம வீதிகளில் உலா வந்தார். நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, புஞ்சையரசந்தாங்கல், வாகை, துாசி கிராமத்தில் வீதியுலா வந்தார். பிற்பகல் 12:00 மணிக்கு துாசி வைகுண்ட பெருமாள் கோவிலில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்தது. அங்கிருந்து பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பாடாகி அப்துல்லாபுரம் மற்றும் அய்யங்கார்குளத்தில் வீதியுலா சென்று, இரவு 8:00 மணிக்கு அய்யங்கார்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார், அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அங்கிருந்து 9:00 மணியளவில் புறப்பாடாகி தாதசமுத்திரம் ஏரிக்கரை வழியாக சென்று, 9:30 மணிக்கு நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் இறங்கினார். அங்கு பக்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து வெளியே எழுந்தருளிய பெருமாள், புஞ்சையரசந்தாங்கல் வழியாக செவிலிமேடு பாலாற்று பந்தலில் இரவு 10:00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப்பின், பாலாற்றங்கரையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !