உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாள் நம்பெருமாள் ஆன தினம் இன்று..!

ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாள் நம்பெருமாள் ஆன தினம் இன்று..!

இன்று (30ம் தேதி ), வைகாசி 17ம் நாள். 651ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே  வைகாசி 17ம் நாள் தான் அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்.1321-ம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர் கியாசுதீன் துக்ளக் என்பவரின் மகன் உலூக்கான் யுவராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டார். அதை ஒட்டி தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆயத்தம் செய்தார். இவரே பின்னர் மன்னரானதும் முகமதுபின் துக்ளக் என்ற பெயரோடு ஆட்சி செய்தார். பெரும் படையோடு தமிழகத்தை நோக்கி வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டதும், புராதனமான கோயிலைப் பாதுகாக்க வேண்டுமே என்று பயந்தனர். திருவரங்கத்தைச் சேர்ந்தவர்கள் திடுக்கிட்டனர். எங்கே கோயில்சொத்துக்கள் கொள்ளை போய்விடுமோ, தெய்வ மூர்த்தங்கள் பின்னப்படுமோ என்றெல்லாம் அஞ்சினர். அப்போது பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் ஒருவர் மூலவர் ரங்கநாதப் பெருமாளையும், தாயார் ரங்கநாயகியையும் மறைத்துச் சுவர் எழுப்பினார்.பின்னர் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதனை பாதுகாக்க வேண்டி, சுமந்து கொண்டு ஊர் ஊராக பயணம் சென்றார். எங்கே ஒரே இடத்தில் தங்கினால் பெருமாள் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து அழகர் கோயில், முந்திரி மலை பள்ளத்தாக்கு, கோழிக்கோடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருப்பதி, செஞ்சி, அழகியமணவாள கிராமம் என பல இடங்களில் பெருமானை மறைத்து வைத்து பாதுகாத்தார். எல்லா இடங்களிலும் தன்னால் இயன்ற பூஜைகளை செய்து வழிபட்டார். 118 வயதில் பிள்ளை லோகாச்சாரியார் செய்த தியாகங்கள் மெய்சிலிர்க்க செய்பவை. பெருமாளை காக்கும் முயற்சியில் மதுரை கொடிக்குளம் அருகே எதிரிகள் முற்றுகையிட்டபோது மலைக்குகை உச்சியை அடைந்த பெரியவர், தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மறைந்தும் போனார். அவரது சீடர்களால் ஸ்ரீரங்கம் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதப் பெருமாள் கவனமாக பாதுகாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகள் ஆம், உங்களால் நம்ப முடியாது 48 ஆண்டுகள் கழித்து இனி எதிரிகள் தொல்லை இல்லை என்ற நிலையில்  மீண்டும் திருவரங்கம் வந்தார் பெருமாள்.இந்த உற்சவ பெருமாளை அங்கிருந்த எல்லோரும் மறந்தே இருந்தார்கள். பிள்ளை லோகாச்சாரியார் சீடர்கள் கொண்டு வந்த சிலை உண்மையானதா என்று கூட நம்ப தயங்கினார்கள். இதற்கு என்ன செய்வது என்று எல்லோரும் தயங்கிய வேளையில் அங்கிருந்த பெரியவர்களை கேட்டனர். அவர்களும் அந்த சிலை விஷயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் பலர் அறியவா பெருமாள் தேசாந்திரம் போனார்?அதனால் சிலை பற்றிய குழப்பம் நீடித்தது. அப்போது தொண்ணூறு வயதைக் கடந்த சலவைத் தொழிலாளி குழப்பத்தை தன்னால் தீர்க்க முடியும் என்று கூறினார். சிறுவயது முதலே பெருமாளின் உடைகளை துவைப்பவன் நான். அதனால் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளநாதப் பெருமாள் சிலையில் கஸ்தூரி மணம் அதிகமாக இருக்கும் என்பது நான் அறிந்த விஷயம். அது சிறு வயதில் இருந்தே எனக்கு பிடித்தமான வாசம் என்றார். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்து ஈரமான உடையை என்னிடம் கொடுங்கள். நான் இது உண்மையான சிலையா என்று சொல்கிறேன் என்றார். அவ்வாறே உடையும் தரப்பட்டது. வாங்கிய உடையை பக்தியோடு கண்ணில் ஒற்றிக்கொண்டு துணியைப் பிழிந்து அந்த நீரை பருகினார். கஸ்தூரி மணத்தோடு பெருமானின் அருளையும் கொண்டிருந்த அந்த திவ்ய தீர்த்தம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டையில் இறங்கியது, தன்னை மறந்து  “இதோ நம் பெருமாள்!” என்று கூறினார். அங்கு இருந்தவர்கள் அனைவரும் பரவசம் அடைந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இவ்வாறு அழகிய மணவாளப் பெருமாள்  நம்பெருமாள் ஆன வைபவம் இன்று நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !