வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.50 லட்சம் வசூல்
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக வைக்கப்பட்ட கூடுதல் உண்டியல்களில் காணிக்கையாக ரூ.11.50 லட்சம் வசூலானது.இக்கோயில் சித்திரை திருவிழா மே 7 முதல் 14 வரை நடந்தது. பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில் வளாகத்தில் கூடுதலாக 22 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நேற்று உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் தியாகராஜன், மேலாளர் பாலசுப்ரமணியம், கணக்காளர் பழனியப்பன் மேற்பார்வையிட்டனர். காணிக்கை எண்ணும் பணியில் தேனி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லுாரி மாணவிகள், கம்பம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டனர். 22 உண்டியல்களில் ரூ.11,50, 472 வசூலானது. கடந்த ஆண்டு திருவிழாவிற்காக வைக்கப்பட்ட கூடுதல் உண்டியலில் ரூ.12,60,430 வசூலானது. இதனை கோயிலுக்கான வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கோயிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள மற்ற 12 உண்டியல்களின் எண்ணிக்கை இன்று நடக்கிறது.