விஜயபுரா ஆசிரம மடத்தில் மோகன் பாகவத் தியானம்
விஜயபுரா: விஜயபுரா குருதேவா ரானடே ஆசிரமம், இஞ்சகேரி மடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நான்கு நாட்கள் தியானம் செய்து, பஜனையில் ஈடுபட்டார்.
விஜயபுரா மாவட்டம், இண்டி தாலுகா, நிம்பாலா கிராமத்தில், குருதேவா ரானடே ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், ஆண்டுதோறும், ஜூன் அல்லது ஜூலை மாதம் தவறாமல் வருவது வழக்கம். அந்த வகையில், மூன்று நாட்களுக்கு முன் ஆசிரமத்துக்கு வந்தார். அங்கு, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், நான்கு நாட்களாக தியானம் செய்தார். பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட நேர தியானத்துக்கு பின், பஜனையில் ஈடுபட்டார். நேற்று இஞ்சகேரி மடத்துக்கு சென்றார். இங்குள்ள குருலிங்க மஹாராஜா மற்றும் பாவோ சாஹேப் மஹாராஜா கோவில்களில் நடந்த பஜனையில் ஈடுபட்டார். ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அவர் தங்கியிருந்த ஆசிரமம், மடம் உட்பட பயணம் செய்த வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.