ஆத்தூர் கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ஆத்தூர்: தீபாவளி பண்டிகையொட்டி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் கோட்டை பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீபாவளி பண்டிகையொட்டி, காமநாதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு, பால், பழம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடந்தது. இதில், காமநாதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், கிராம பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.