ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி விரதம்; வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!!
லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். கணவனே கண்கண்ட தெய்வமென எப்போதும் பெருமாளை பிரியாதவள் லட்சுமி. பெண்கள் வரலட்சுமி நோன்பு இருந்து வழிபட கணவரின் ஆயுள் கூடும். மகாலட்சுமிக்கு மாதுளை படைத்து வழிபட வழிபட செல்வம் சேரும்
லட்சுமி படத்தின் முன், ஒரு தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் தீர்த்தம் நிரப்பிய செம்பு, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். வீட்டு வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி “மகாலட்சுமித் தாயே! எங்கள் இல்லத்துக்கு வருக!” என்று அழைக்க வேண்டும். விநாயகரை மனதில் நினைத்து வணங்கிய பிறகு, உள்ளே வந்த லட்சுமி கலசத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே படத்திற்கும் கலசத்திற்கும் பூஜை செய்து, தன் விரதத்தை ஏற்று, குடும்பத்திற்கு சுபிட்சம் அருளுமாறும், தீர்க்க சுமங்கலியாய் இருக்கவும் அருள்புரியுமாறு பிரார்த்திக்க வேண்டும், லட்சுமி தாயார் குறித்த பாடல்களைப் பாடலாம். ஸ்லோகங்களையும் சொல்லலாம். பூஜை முடிந்ததும் நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இன்று அலைமகளை வழிபட்டு அல்லல்கள் யாவும் நீங்கப்பெறுவோம்!