சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் வாள்களுக்கு சிறப்பு வழிபாடு
சிவகங்கை; சிவகங்கை அருகே சோழபுரத்தில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மொழிநாதர் சமேத அறம்வளர்த்த நாயகி கோயிலில், சிவகங்கை மன்னர்களுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக மன்னர் அமர்ந்து பட்டம் ஏற்கும் விதமாக ‘கவுரிபீடம்’ அமைத்துள்ளனர். ஆண்டு தோறும் ஆவணி அமாவாசையன்று, இக்கோயிலில் உள்ள கவுரிபீடத்தில் தேவஸ்தானத்தில் உள்ள வெள்ளி வாளை வைத்து, வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆவணி அமாவாசையான நேற்று மாலை 5:30 மணிக்கு சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கவுரிபீடத்தில் ‘வெள்ளி வாள்’களை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், சேவற்கொடியோன், கோயில் ஸ்தானிகர் ஆத்மநாத குருக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.