உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோயிலில் 5 ஆண்டுகளாக பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

திருச்செந்துார் கோயிலில் 5 ஆண்டுகளாக பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

திருநெல்வேலி; அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வருகின்றனர். கோயிலில் மூலவர் சன்னதிக்கு அருகே அமைந்துள்ள பஞ்சலிங்கத்தையும் பக்தர்கள் தரிசித்து வந்தனர். பஞ்ச லிங்க தரிசனத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுகுறித்து பா.ஜ., ஆன்மிகப்பிரிவு நெல்லை மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஞ்சலிங்க தரிசனத்திற்கு செல்லும் பாதை மிக குறுகலான பாதையாக இருப்பதாலும், பஞ்சலிங்கம் மூலவருக்கு மிக அருகில் இருப்பதால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம் அடைந்ததாலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பா.ஜ., ஆன்மிக பிரிவு செயலாளர் சங்கரசுப்பிரமணியன் கூறுகையில், ‘திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தரிசனம் அனுமதி மறுக்கப்பட்ட தகவல் குறித்து பொது அறிவிப்போ, தகவல் பலகையோ, பத்திரிகை செய்தியோ வழங்கப்படவில்லை. திருச்செந்துார் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது இயல்பு தான். அதற்காக வரலாறு மற்றும் மரபுகளை மறைக்கப்படக் கூடாது. நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்திலாவது பஞ்சலிங்க தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !